பொதுமக்களின் போராட்டம் எதிரொலி சீன தலைநகரில் கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகள் தளர்வு


பொதுமக்களின் போராட்டம் எதிரொலி சீன தலைநகரில் கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகள் தளர்வு
x
தினத்தந்தி 7 Dec 2022 1:00 AM IST (Updated: 7 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

விரக்தி அடைந்த மக்கள் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர்.

பீஜிங்,

சீனாவில் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரிக்க தொடங்கியதால் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் விரக்தி அடைந்த மக்கள் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். பின்னர் இந்த போராட்டம் அரசு எதிர்ப்பு போராட்டமாக மாறியது. அதிபர் ஜின்பிங்கை பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

போலீஸ் படை மூலம் பெரும்பாலான நகரங்களில் போராட்டங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் ஒரு சில நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. எனவே மக்களின் கோபத்தை தணிக்கும் விதமாக கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது பீஜிங்கில் கொரோனா பரிசோதனை தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி பீஜிங்கில் உள்ள வணிக வளாகங்கள், சூப்பர்மார்க்கெட் உள்ளிட்ட வணிக கட்டிடங்களிலும், குடியிருப்பு வளாகங்களிலும் நுழைவதற்கு கொரோனா பரிசோதனை (நெகடிவ்) சான்றிதழ் இனி அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஓட்டல்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் மதுபான விடுதிகள் போன்றவற்றில் நுழைவதற்கு 48 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட கொரோனா பரிசோதனை (நெகடிவ்) சான்றிதழ் அவசியம் என்கிற கட்டுப்பாடு தொடருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story