'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' - பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷியா கருத்து


பிபிசி தகவல் போர் நடத்துகிறது - பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷியா கருத்து
x

குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி நேரடி பொறுப்பு என்று பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிட்டுள்ளது.

மாஸ்கோ,

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானார்.

இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை சம்பவம், குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த 21-ம் தேதி தடை விதித்தது.

இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் பிபிசி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவில் தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் குறித்து ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ள ரஷிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மரியா சகரொவா, சுதந்திரமான கொள்கைகளை கொண்டுள்ள ரஷியா மட்டுமின்றி சக்திவாய்ந்த பிற உலக நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு பின், இங்கிலாந்து அரசாங்கத்துடனும் பிபிசி சண்டையிட்டது என்பது தெரியவந்தது. சில குழுக்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புக்கு எதிரான கருவியாக பிபிசி செயல்பட்டது. பிபிசி-க்கு அதற்கேற்ப பதிலடி கொடுக்க வேண்டும்' என்றார்.


Next Story