வங்காளதேசம்: இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் செயலிழந்த தேர்தல் செயலி..!!
வங்காளதேசத்தில் எதிர்க்கட்சியினரின் வன்முறைக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
டாக்கா,
அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையினை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது.
இந்நிலையில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்குச் சாவடி மையங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான விவரங்களைக் கண்டறிய வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய Tk21 கோடி செயலி, நேற்று முதல் வேலை செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக தேர்தல் கமிஷன் செயலாளர் ஜஹாங்கீர் ஆலம், தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்கள் அன்றைய தினம் முதல் தங்கள் வாக்களிக்கும் மையங்களைக் கண்டறிய இந்த செயலியைப் பயன்படுத்தலாம் என்று கடந்த திங்களன்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து பலமுறை முயற்சித்த போதிலும், செயலியை அணுக முடியவில்லை என்று வாக்காளர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் சிஸ்டம் மேலாளர் அஷ்ரப் ஹொசைன், செயலியை அணுகுவதில் உள்ள சிக்கல் தற்காலிகமானது என்றும், விரைவில் அது தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் செயலியை அணுக முடியாததற்கு, ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்த முயன்றது கூட காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா (78) அறிவித்தார். எனவே சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதி கலீதா வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.