சுகாதார காப்பீடு நிறுவனத்தில் இருந்து தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் - ரஷியா மீது ஆஸ்திரேலியா குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் விவரங்கள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளன.
சிட்னி,
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு நிறுவனம் 'மெடிபேங்க்' ஆகும். இந்த நிறுவனத்தின் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக காப்பீடு பெற்றவர்களின் விவரங்களை, அந்நிறுவனத்தின் தகவல் சேமிப்பு மையத்தில் இருந்து மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து திருடியுள்ளனர்.
அதோடு திருடப்பட்ட இந்த தகவல்களை இணையதளத்தில் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக கருக்கலைப்பு சிகிச்சை பெற்றவர்கள், போதைப் பழக்கங்களில் இருந்து விடுபட சிகிச்சை பெற்றவர்கள், மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்டவர்களின் பட்டியல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.
முந்தைய காலங்களில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் என மொத்தம் சுமார் 97 லட்சம் பேரின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக 'மெடிபேங்க்' நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், அவர்கள் எடுத்துக் கொண்ட மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணியில் ரஷியா இருப்பதாக ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் கமிஷனர் ரீஸ் கெர்ஷா கூறுகையில், "இதை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். இதற்கு காரணமானவர்கள் ரஷியாவில் இருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார். மேலும் இன்டர்போல் உதவியுடன் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.