ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய 15 டிரோன்களை போர்க்கப்பல் மற்றும் போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏடன்,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 5 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புடைய அனைத்து சரக்கு கப்பல்களையும் தாக்குவோம் என அறிவித்தனர்.
அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதி வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்கா தலைமயில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டுப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுப்படை ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அவ்வப்போது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா நேற்று வான்தாக்குதல் நடத்தியது. கப்பல்கள் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏற்றி சென்ற லாரி மீது குண்டு வீசப்பட்டதாகவும், அதில் 2 கிளர்ச்சியாளர்களும், எண்ணற்ற ஏவுகணைகளும் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசினர். எனினும் அமெரிக்க போர்க்கப்பல் அந்த ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திவிட்டது.
போர்க்கப்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே அமெரிக்கா ஏமனில் வான்வழி தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் செங்கடலை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகளுடன் அனுப்பிய 15 டிரோன்களை அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.