துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து விபத்தில் சிக்கி 28 அகதிகள் பலி
துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து விபத்தில் சிக்கி 28 அகதிகள் பலியாகினர்.
துனிஷ்,
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர். இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் இவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் துனிசியாவின் கடலோரப் பகுதியில் மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றபோது குறைந்தது 28 அகதிகள் படகுகள் மூழ்கியதில் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு விபத்தில் மட்டும் குறைந்தது 20 அகதிகள் பலியாகினர். மேலும் 60 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.
இதற்கிடையில், கடந்த 48 மணி நேரத்தில் 58 படகுகளில் இருந்து 3,300 பேரை மீட்டு ஒருங்கிணைத்ததாக இத்தாலிய கடலோர காவல்படையினர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
பெரும்பாலான மீட்புப் பணிகள் துனிசியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு மிக அருகில் உள்ள இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்குச் செல்லும் படகுகளில் நடத்தப்பட்டன.