அமெரிக்காவில் 2 நாட்களில் 60 புயல்கள்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு


அமெரிக்காவில் 2 நாட்களில் 60 புயல்கள்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
x

அமெரிக்காவில் கடந்த 2 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கின. இதில் பலி எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2-ந் தேதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படி ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களை கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து பயங்கர புயல்கள் தாக்கியன. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு சுமார் 60 புயல்கள் ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல்கள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களை பந்தாடின. மணிக்கு பல மைல் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றில் சிக்கி சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.

ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 8 மாகாணங்களில் பல நகரங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 5 லட்சம் பேர் இருளில் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் காரணமாக பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. பென்சில்வேனியா மற்றும் நியூயார்க் மாகாணங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலி எண்ணிக்கை உயர்வு

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஆர்கன்சாஸ் மாகாண கவர்னர் சாண்டர்ஸ் முன்கூட்டியே அங்கு அவசர நிலை உத்தரவை பிறப்பித்தார். இதனால் அங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

அதே சமயம் இல்லினாய்ஸ் மாகாணத்தில் புயலால் அதிக உயிர் பலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. புயலால் 11 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தது.

எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

இந்த சூழலில் இல்லினாய்ஸ், ஆர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் மேலும் பல உடல்களை மீட்பு குழுவினர் மீட்டதை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. டஜன் கணக்கானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வருகிற 10-ந் தேதி வரை, இதுபோல் மேலும் பல புயல்கள் தாக்கக்கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்


Next Story