ஏமனில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து: 21 பேர் பரிதாப சாவு


ஏமனில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து: 21 பேர் பரிதாப சாவு
x

கோப்புப்படம்

ஏமனில் திருமண கோஷ்டி சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏடன்,

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா.

இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய தீவான கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டிருந்தனர்.

படகு கடலில் கவிழ்ந்தது

படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர். இந்த படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

21 பேர் பரிதாப சாவு

ஆனால் அதற்குள் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் என 21 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அதே சமயம் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.

அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

விரிவான விசாரணை

அதே சமயம் கடலில் வீசிய பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 21 பலியானது ஏமனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story