சிறுகோளின் 10 லட்சம் கிலோ பாறைகள், தூசுகள் விண்ணில் வெளியேற்றம்: நாசா அமைப்பு


சிறுகோளின் 10 லட்சம் கிலோ பாறைகள், தூசுகள் விண்ணில் வெளியேற்றம்:  நாசா அமைப்பு
x

சிறுகோளின் 10 லட்சம் கிலோ எடை கொண்ட பாறைகள், தூசுகள் விண்ணில் வெளியேற்றப்பட்டு உள்ளன என நாசா அமைப்பு தெரிவித்து உள்ளது.



நியூயார்க்,


அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு, கலிபோர்னியாவில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் உதவியுடன் டார்ட் என பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியது.

10 மாதங்கள் கழித்து, கடந்த செப்டம்பர் 26-ந்தேதி சிறுகோள் ஒன்றை இந்த டார்ட் விண்கலம் மோதி, அதன் திசையை மாற்றியமைத்தது.

இதனால், பூமி மீது விண்கல் ஒன்று மோதி, பேரழிவை ஏற்படுத்துவதில் இருந்து தடுத்து பாதுகாக்கும் மனிதகுலத்தின் திறனை பரிசோதிக்கும் வகையிலான இந்த வரலாற்று முயற்சிக்கு உரிய பலன் கிடைத்து உள்ளது.

இந்த முயற்சியால், 70 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து சிறுகோளின் சுற்று வட்டப்பாதையானது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மோதலால், சிறுகோளின் 10 லட்சம் கிலோ எடை கொண்ட பாறைகள் மற்றும் தூசுகள் விண்வெளியில் வெளியேற்றப்பட்டு உள்ளன என நாசா அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த பொருட்கள், 6 முதல் 7 ரெயில் பெட்டிகளில் அடைக்கும் அளவுக்கு இருக்கும். இந்த டிடிமோஸ் என்ற விண்கல்லோ அல்லது அதனை சுற்றி வரும் டைமார்போஸ் என்ற துணைக்கோளோ பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்த போவது இல்லை என்றபோதிலும், இலக்கை தாக்கி அழிக்கும் பயிற்சிக்கான இந்த திட்டம் சிறப்பு வாய்ந்தது என நாசா கூறியுள்ளது.

இதனால், ஒருவேளை வருங்காலத்தில் பூமியை நோக்கி பேரழிவை ஏற்படுத்த கூடிய திறன் படைத்த சிறுகோள்கள் தாக்குவதற்கு வரும்போது, அதன் திசையை மாற்றியமைக்கும் வகையில் இந்த விண்கல பரிசோதனை உதவும் என கூறப்படுகிறது.




Next Story