அசர்பைஜானில் கியாஸ் நிலையம் தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி பலி..!!
அசர்பைஜானில் கியாஸ் நிலையம் தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
பாகு,
தென்மேற்கு ஆசிய நாடான அசர்பைஜானுக்கு சொந்தமான பகுதி நாகோர்னோ-கராபாக். இது 1994-ம் ஆண்டு முதல் அண்டை நாடான அர்மீனியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளை அங்குள்ள பிரிவினைவாதிகள் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர்.
தனது நாட்டின் பகுதிகளை மீண்டும் இணைக்கும் வகையில் அசர்பைஜான் ராணுவம் அங்கு அதிரடியாக களமிறங்கியது. அப்போது ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரிவினைவாதிகள் சரண் அடைந்தனர்.
அணிவகுத்த கார்கள்
இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்தவர்கள் அர்மீனியாவுக்கு தப்பி செல்ல முயன்றனர். இதனால் அசர்பைஜானின் ஸ்டெபனகெர்ட்டில் உள்ள கியாஸ் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக ஏராளமான கார்கள் அணிவகுத்து நின்றன.
அப்போது அந்த கியாஸ் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் பல கார்கள் தூக்கி வீசப்பட்டன. மேலும் இந்த தீ மளமளவென அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதனால் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும் இந்த தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.