சமூக ஊடகங்களில் கொலையாளியை "ஹீரோ" என புகழ்ந்த சீனர்கள்! ஷின்சோ அபே மீதான தாக்குதலை கொண்டாட என்ன காரணம்..?
ஜப்பான் முன்னாள் பிரதமர் மீதான தாக்குதலை சீன மக்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடினர்.
பீஜிங்,
சமூக ஊடகங்களில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான தாக்குதலை சீன மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த தகவல் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் உலக தலைவர்கள் பலரும் (சீனா உட்பட) ஷின்சோ அபே மீதான தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், சீனர்களின் இந்த நடவடிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த அளவிற்கு அவர்கள் ஜப்பானிய பிரதமரை வெறுக்க காரணம் என்ன..?
ஷின்சோ அபே ஜப்பானில் நீண்டகாலமாக பதவியில் இருந்த பிரதமர் ஆவார். சீனா மற்றும் ஜப்பான் இடையே நீண்ட காலமாக கிழக்கு சீன கடல் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் எல்லை பிரச்சினை உள்ளது.
இந்நிலையில், 2007ல் ஆஸ்திரேலியா, இந்தியா , அமெரிக்கா உடன் ஜப்பானையும் சேர்த்து 'குவாட்' அமைப்பு தோன்ற ஷின்சோ அபே நடவடிக்கை எடுத்தார். இது சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையாக சீனா கருதியது.
மேலும், 2021 டிசம்பரில் அவர் பேசுகையில், தைவான் மீதான தாக்குதல் ஜப்பான் மீதானதாக கருதப்படும். அப்படியாயின், அது ஜப்பான் அமெரிக்க கூட்டணி மீதானதாக கருதப்படும் என்று அபே தெரிவித்திருந்தார்.
அவர் இவ்வாறு பேசியது சீன அரசை மேலும் கோபத்திற்குள்ளாக்கியது.
ஷின்சோ அபே கொண்டிருந்த தனது வலுவான தேசியவாத நிலைப்பாட்டிற்காகவும், ஜப்பானிய ராணுவத்தை நாட்டின் தற்காப்புக்காக புதுப்பிக்கும் அவரது முயற்சியையும் சீனாவில் விரும்பவில்லை.
இதனால் தான், சீனாவில் உள்ள மக்கள் இந்த சம்பவத்தை கொண்டாடி வருகின்றனர். சீன சமூக ஊடக தளமான 'வெய்போவில்' மக்கள் இந்த சம்பவத்தை பாராட்டி வருகின்றனர்.
மேலும், தற்போதைய ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவும் இதே கதியை சந்திக்க வேண்டும் என்று சீன மக்கள் விரும்பி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பலர் இந்த கொடூர தாக்குதலை நடத்திய 'டெட்சுயா யமகாமியை' "ஹீரோ" என்று அழைத்தனர்.
ஷின்சோ அபே மீதான தாக்குதலைக் கொண்டாடும் பல இடுகைகள் மற்றும் அரட்டைப் பெட்டிகளைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்களை பலர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.
சீன சமூக ஊடக தளமான 'வெய்போ' சீனர்கள் தவிர வேறு யாரும் உபயோகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த தாக்குதலுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவத்தை இரு நாடுகளுக்கு இடையேயான உறவுடன் இணைக்கக் கூடாது என்றும் கூறினார்.