ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி அல்பேனீஸ் முறைப்படி பதவியேற்பு


ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி அல்பேனீஸ் முறைப்படி பதவியேற்பு
x

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார்.

கேன்பர்ரா,

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21ந்தேதி நடந்தது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அதிக இடங்களை கைப்பற்றிய நார்மன் பிரதமராக தேர்வானார்.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் முறைப்படி கேன்பர்ரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை பதவியேற்று கொண்டார். இதற்காக சிட்டினியில் உள்ள தனது வீட்டில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அவர் ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமர் ஆவார். அவருடன் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் புதிதாக மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர். அவருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் நார்மனின் மகன் நாதன் (வயது 21) மற்றும் நார்மனின் காதலியான ஜோடீ ஹெய்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதமர் பதவியேற்ற பின்பு கவர்னருடன் பிரதமர் நார்மன் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டார்.

இதனை தொடர்ந்து டோக்கியோவில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அவர் ஜப்பான் செல்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலைபேசி வழியே நார்மனுக்கு வாழ்த்து செய்தி கூறிய நிலையில், டோக்கியோவில் அவரை நேரில் சந்திக்கிறார்.

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள், 'குவாட்' என்னும் நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கிற 2வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி, நாளை (24ந்தேதி) முடிகிறது. இதில் நான்கு நாட்டு தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.


Next Story