காசா போர் சூழலில்... சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை ஏப்ரலில் அதிகரிக்கும்; இஸ்ரேல் நம்பிக்கை


காசா போர் சூழலில்... சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை ஏப்ரலில் அதிகரிக்கும்; இஸ்ரேல் நம்பிக்கை
x

இஸ்ரேலில் ஏப்ரல் 21-ந்தேதி விடுமுறை தினத்தில் அதிக அளவில் பயணிகளின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடுமையான தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகளை வீசி தாக்கியதுடன், எல்லையில் புகுந்த பயங்கரவாதிகள் எதிரே வந்தவர்களை எல்லாம் சுட்டு தள்ளினர். இதில், அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதன்பின், ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

5 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் மோதலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். போரின் தொடர்ச்சியாக, காசாவில் 5 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் பஞ்சத்தில் சிக்கியுள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த மாதம் இஸ்ரேலில் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சகம் கூறும்போது, ஏப்ரல் மாதத்தில் பென் குரியான் விமான நிலையத்தில் சர்வதேச அளவிலான பயணிகள் எண்ணிக்கை 12 லட்சத்திற்கு கூடுதலாக இருக்கும் என தெரிவித்தது.

காசாவுக்கு எதிரான போர் ஒருபுறம் நடந்து வந்தபோதிலும், விடுமுறை நாட்கள் வரவுள்ளன. இதேபோன்று, சர்வதேச விமான நிறுவனங்கள் இஸ்ரேலில் மீண்டும் விமான சேவையை தொடங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை முன்னிட்டு சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை ஏப்ரலில் அதிகரிக்கும் என இஸ்ரேல் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

அதிலும், ஏப்ரல் 21-ந்தேதி விடுமுறை தினத்தில் இஸ்ரேலில் அதிக அளவில் பயணிகளின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பாதுகாப்பு காரணங்களால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் பாஸ்கா விடுமுறை தினத்தில் 40 சதவீதம் அளவுக்கு பயணிகளின் வருகை குறைய கூடும் என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேலில் இருந்து விடுமுறை கொண்டாட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும். இதன்படி, சர்வதேச விமானங்களில் நாளொன்றுக்கு 60 ஆயிரம் பயணிகள் வரை வந்து செல்வார்கள். இதில், கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு இஸ்ரேல் மக்கள் அதிக அளவில் செல்வார்கள். இதுதவிர, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் அந்நாட்டு மக்கள் பயணம் மேற்கொள்வார்கள்.


Next Story