அமெரிக்கா ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது; இந்தியா கண்டனம்
ஆண்டுதோறும் சிறுபான்மையினர் மீது தொடரும் தாக்குதல் என்ற ரீதியிலான அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட சர்வதேச மத சுதந்திரம் பற்றிய 2021ம் ஆண்டுக்கான அறிக்கையில், சிறுபான்மை சமூகத்தினர் மீது படுகொலைகள், தீவிர தாக்குதல் மற்றும் மிரட்டல்கள் விடுவது உள்ளிட்ட தாக்குதல்கள் ஆண்டுதோறும் இந்தியாவில் தொடர்ந்து வருகிறது தெரிவித்து இருந்தது.
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் வெளியிட்ட அந்த அறிக்கையானது, உலகம் முழுவதும் உள்ள மத சுதந்திர மீறல்களின் நிலையை பற்றி விவரிக்கிறது. அவற்றில் இந்திய பிரிவில் குறிப்பிடும்போது, சிறுபான்மை சமூகத்தினர் மீது படுகொலைகள், தீவிர தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட தாக்குதல்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து வருகிறது.
இந்தியாவில், பசு கண்காணிப்பு என்ற பெயரில் பசு படுகொலைகள் அல்லது பசு மாமிச விற்பனை என்ற பெயரில் இந்துக்கள் அல்லாதோருக்கு எதிரான சம்பவங்களும் நடந்து வருகின்றன என்று குற்றச்சாட்டாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய சிறுபான்மை சமூகத்தினர் மீது தாக்குதல் என்ற வகையிலான அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளது.
இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறும்போது, அமெரிக்க வெளியுறவு துறையின் 2021 அறிக்கை மற்றும் அமெரிக்க மூத்த அதிகாரிகளின் விமர்சனங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டுள்ளோம்.
சர்வதேச உறவுகளில் ஓட்டு வங்கி அரசியலானது நடைமுறையில் உள்ளது என்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. உள்நோக்கம் சார்ந்த ஆய்வுகள் மற்றும் ஒரு சார்புடைய பார்வைகள் தவிர்க்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துவோம்.
இயற்கையிலேயே பன்முக தன்மை கொண்ட சமூகம் ஆக இந்தியா, மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கிறது. இனரீதியான மற்றும் கலாசார ரீதியிலான தாக்குதல்கள், வெறுப்புணர்வு குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறை ஆகிய விவகாரங்களை கவனத்தில் கொண்டு அவற்றை அமெரிக்காவுடனான ஆலோசனையின்போதும், இந்தியா எப்போதும் சுட்டி காட்டி வந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.