ஒருவேளை அடுத்த நூற்றாண்டில் தான் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக வாய்ப்பு - கேலி செய்த அல்பேனிய பிரதமர்!
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அல்பேனியாவுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.
டிரானா,
ஐரோப்பாவின் தென்கிழக்கேயுள்ள நாடான அல்பேனியா என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக போராடி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்பேனியா, வட மாசிடோனியா ஆகிய இரு நாடுகளை இணைப்பது, மற்றும், அதில் உக்ரைன் நாடு இணைவதற்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்குவது உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவாக்கும் நடவடிக்கைகள் நம்பகமான முறையில் இடம்பெறவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
அல்பேனியாவில் ஐரோப்பிய ஒன்றிய இணைப்புக்கான ஆதரவு இன்னும் அதிகமாக உள்ளது. 2020இல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 97 சதவீத அல்பேனியர்கள் தங்கள் நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அல்பேனியாவுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும். உக்ரைன் கடந்த பிப்ரவரி 28 அன்றுதான் விண்ணப்பமே கொடுத்தது.
அதேநேரத்தில் அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்து, உக்ரைன் மற்றும் மால்டோவா நாட்டுக்கும் இந்த வாரம் வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது.
மறுபுறம், பல ஆண்டுகளாக பொறுமையாக காத்துக்கொண்டிருக்கும் அல்பேனியா விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தைகள் முடிவில்லாததாக அமைந்தது.
இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் தாமதம் குறித்து அல்பேனியா பிரதமர் எடி ராமா கோபமடைந்தார். இது குறித்து அவர் கூறுகையில், ஒருவேளை 22 ஆம் நூற்றாண்டில் எங்களது நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரக்கூடும் என்று கேலி செய்தார்.