பயணிகளுக்கு ஏர் இந்தியா ரூ.984 கோடி திருப்பித்தர வேண்டும்; அமெரிக்கா உத்தரவு


பயணிகளுக்கு ஏர் இந்தியா ரூ.984 கோடி திருப்பித்தர வேண்டும்; அமெரிக்கா உத்தரவு
x

ஏர் இந்தியா (பிடிஐ படம்)

பயணிகளுக்கு ஏர் இந்தியா ரூ.984 கோடி திருப்பித்தர வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ரூ.11 கோடி அபராதமும் விதித்துள்ளது.

வாஷிங்டன்,

டாடா குழுமம் விலைக்கு வாங்குவதற்கு முன்பு, ஏர் இந்தியா விமான நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இருந்தது. அப்போது, கொரோனா காலகட்டத்தில், ஏர் இந்தியா சில விமான சேவைகளை ரத்து செய்தது.சில விமானங்களின் சேவையை மாற்றி அமைத்தது.ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயண கட்டணத்தை கோரிக்கை அடிப்படையில் திருப்பி வழங்குவதுதான் (ரீபண்ட்) ஏர் இந்தியாவின் கொள்கை ஆகும். அதற்கு நீண்ட கால தாமதம் செய்தது.

ஆனால், அமெரிக்க போக்குவரத்து துறை கொள்கைப்படி, விமானங்கள் ரத்து செய்யப்பட்டவுடன் பயணிகளுக்கு கட்டணத்தை திருப்பித்தர வேண்டும். அப்படி தர மறுப்பதோ, கட்டணத்துக்கு பதில் பற்றுச்சீட்டுகளை அளிப்பதோ சட்ட விரோதம் ஆகும்.

இந்த கொள்கைக்கு முரணாக ஏர் இந்தியா நடந்து கொண்டதால், அமெரிக்க போக்குவரத்து துறையிடம் 1,900 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் பாதிக்கு மேற்பட்ட புகார்களை பரிசீலனை செய்ய ஏர் இந்தியா நிறுவனம் 100 நாட்கள் எடுத்துக் கொண்டது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர் இந்தியா 12 கோடியே 15 லட்சம் டாலரை (ரூ.984 கோடி) திருப்பித்தர வேண்டும் என்று அமெரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், கட்டணத்தை திருப்பித் தருவதில் அதிக தாமதம் ெசய்ததற்காக 14 லட்சம் டாலர் (ரூ.11 கோடியே 24 லட்சம்) அபராதம் விதித்தது.ஏர் இந்தியா மற்றும் 5 வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மொத்தம் ரூ.60 கோடி டாலர் (ரூ.4 ஆயிரத்து 860 கோடி) திருப்பித்தர அமெரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story