காலக்கெடு முடிவு: பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் ஆப்கானிஸ்தான் அகதிகள்..!!


காலக்கெடு முடிவு: பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் ஆப்கானிஸ்தான் அகதிகள்..!!
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 2 Nov 2023 4:00 AM IST (Updated: 2 Nov 2023 1:56 PM IST)
t-max-icont-min-icon

எந்தவித ஆவணமும் இல்லாத ஆப்கானிஸ்தான் அகதிகள், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக வன்முறை தொடர்ந்து வந்ததால் போர்க்களமானது. இதனால் சொந்த நாட்டை விட்டு லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். வாழ்க்கை செலவு, கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தானை தேடியே பெரும்பாலானோர் வந்தனர்.

இதுவரை 13 லட்சம் ஆப்கானியர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு பாகிஸ்தானில் தங்குவதற்கான அந்தஸ்தை பெற்ற நிலையில் 20 லட்சம் மக்கள் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் வசித்து வந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியபோது மேலும் லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.

தற்போது பாகிஸ்தானில் பொருளாதார தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் உடனான பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு, தலீபான்கள் உடனான உறவில் விரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக நாட்டில் உள்ள ஆப்கான் அகதிகளை நவம்பர் 1-ந்தேதிக்குள் வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டது. மேலும் தடையை மீறுபவர்கள் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என எச்சரிக்கப்பட்டது.

இதனால் கடந்த மாதத்திற்குள் எண்ணற்ற ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர். அதில் பலர் அங்கேயே தங்கியிருந்தால் கைது செய்யப்படுவோம் என அஞ்சியதாக தெரிவித்தனர். இந்தநிலையில் பாகிஸ்தான் கொடுத்த காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நாட்டில் எந்தவித ஆவணமும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் நாடு கடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எந்தவித ஆவணமும் இல்லாத ஆப்கானிஸ்தான் அகதிகள், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதன்படி ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கராச்சி, ராவல்பிண்டி, கைபர் பக்துகுவா மாகாணம், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேறி வருகின்றனர்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு ஐநா அமைப்பு, உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 1,00,000 ஆப்கானிஸ்தான் அகதிகள் தானாக முன்வந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள டோர்காம் எல்லையைக் கடந்தும் மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் உள்ள சாமன் கிராசிங்கிலிருந்தும் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story