உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு இறுகி, பிணைந்த ஸ்பைக் புரதம் காரணம்; ஆய்வில் தகவல்


உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு இறுகி, பிணைந்த ஸ்பைக் புரதம் காரணம்; ஆய்வில் தகவல்
x

கொரோனா வைரசில் இறுகி, பிணைந்து காணப்படும் ஸ்பைக் புரதம், அதன் உருமாறிய வகைகள் அதிக வலிமையாக பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய காரணியாக உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.

வாஷிங்டன்,

கொரோனா பெருந்தொற்று 3 ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டி போட்டு வருகிறது. எனினும், இதற்கான தீர்வு இன்னும் காணப்படாத சூழல் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தொடக்கத்தில் திணறின.

அதனால், ஊரடங்கு அமல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முக கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை கடைப்பிடித்தன.

ஒருபுறம் கொரோனா வைரசை பற்றி அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மறுபுறம் மக்களை அரசு பாதுகாத்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி என்ற ஒன்றை விரைவாக அறிமுகப்படுத்தி, அதனை உலக நாடுகள் பயன்பாட்டிற்கும் கொண்டு வந்து உள்ளன. எனினும், கொரோனா உருமாற்றம் அடைந்து பல்வேறு வகைகளாக, பொதுமக்களிடையே பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றின் நீண்டகால பாதிப்புகளும் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

ஆனால், கொரோனாவுக்கான தீர்வை கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் இல்லாத நிலையே தொடர்கிறது. அடுத்தடுத்து டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என வீரியமுடன் உருமாற்றம் பெற்று அவை நாடுகளிடையே பரவி வருகின்றன.

இதுபற்றி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதுபற்றிய அறிக்கையை ஜர்னல் இலைப் என்ற இதழில் வெளியிட்டு உள்ளனர்.

அதில், ரசாயன மற்றும் உயிர்ரசாயன மற்றும் மூலக்கூறு உயிரியியல் துறையின் இணை பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளரான கணேஷ் ஆனந்த் கூறும்போது, தொடக்கத்தில் கொரோனா வைரசில் உள்ள ஸ்பைக் எனப்படும் புரத வகையானது அதிகம் நெகிழ்வு தன்மை கொண்டது என நாங்கள் கண்டறிந்தோம். அதன் ஸ்டெம் பகுதியில் கட்டுகளாக அவை பின்னி, பிணைந்து இருந்தன.

ஆனால் காலப்போக்கில், உருமாற்றம் அடையும்போது அந்த புரதங்கள் இறுக்கம் அடைந்து, அதிக கடினம் வாய்ந்து, வலிமையடைந்த ஒன்றானது. அது தற்போது, அதிகம் இறுகி இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம் என கூறியுள்ளார்.

நீண்ட காலத்திற்கு தற்போதுள்ள தடுப்பூசிகள் திறனுடன் செயல்படும். உண்மையான ஒன்றை கண்டறியும் பணியில் கிடைக்கும் தடுப்பூசியை விட இது செயல்திறன் கொண்டிருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனாவின் உருமாற்றம் அடைந்த புதிய வகைகளை எதிர்கொள்ளும் திறன் படைத்தவைகளாக பூஸ்டர் தடுப்பூசிகள் உள்ளன. இவற்றை போட்டு கொள்ளாத மக்களுக்கு அதிக பாதுகாப்பு என்பது இருக்காது என கூறியுள்ளார்.

ஒமைக்ரான் வகையை இலக்காக கொண்டு வருங்காலத்தில் உருவாகும் தடுப்பூசிகள், நீண்டகாலத்திற்கு திறமையாக செயல்பட கூடியவையாக இருக்கும் என்றும் ஆனந்த் கூறுகிறார்.

இந்த ஸ்பைக் புரதம் ஆனது மிக அதிக இறுக்கத்துடன் பிணைந்து உள்ளது. அதனால், அது இன்னும் உருமாற்றம் அடைவதற்கான வாய்ப்பு இல்லை என அவர் கூறுகிறார்.

ஆனந்த் கூறும்போது, எந்தளவுக்கு இறுகி இருக்க முடியும் என்பதற்கு என்று சில வரைமுறைகள் உள்ளன. அதனால், நாம் தற்போது எச்சரிக்கையுடனான நேர்மறையான விசயங்களை கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். தொடர்ந்து உருமாற்றம் அடைந்த கொரோனா வகை இனி வெளிப்படாது என்று அவர் கூறுகிறார்.


Next Story