இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம்
முல்லலைத்தீவு புதைகுழி தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு,
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் மாயமாகினர். போரின் போதும் அதற்கு பிறகும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மனித புதைக்குழிகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படவில்லை.
இந்த சூழலில் கடந்த மாதம் 29-ந் தேதி முல்லைத்தீவில் கொக்குத்தொடுவாய் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்தும் பணிகளுக்காக குழி தோண்டியபோது, சில மனித எலும்புகள், போராளிகளின் ஆடைகள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் கண்டெடுக்கப்பட்டன. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, போரின்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் முல்லலைத்தீவு புதைகுழி தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த போரின்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுத்தனர். அதன்படி நேற்று தமிழர்களின் ஆதிக்கம் மிகுந்த வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதனிடையே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைந்த மாணவர் அமைப்பு இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தது.