பிரதமர் மோடி மீது புகார் அளிக்க வேண்டும்; பாகிஸ்தான் நடிகை டுவிட்டால் சர்ச்சை
பிரதமர் மோடி மீது புகார் அளிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் நடிகையின் டுவிட்டருக்கு டெல்லி போலீசார் பதிலடி அளித்து உள்ளனர்.
கராச்சி,
பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஷெஹார் ஷின்வாரி. இவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், டெல்லி போலீசாரின் ஆன்லைன் வழி லிங்க் எவருக்கேனும் தெரியுமா? என்னுடைய பாகிஸ்தான் நாட்டில் குழப்ப நிலை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை பரப்பி வரும் இந்திய பிரதமர் மற்றும் ரா எனப்படும் இந்திய உளவு அமைப்புக்கு எதிராக நான் புகார் ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.
அவர்கள் கூறுவது போன்று இந்திய நீதிமன்றங்கள் சுதந்திரமுடன் உள்ளது என்றால், அதன்பின் இந்திய சுப்ரீம் கோர்ட்டு எனக்கு நீதி வழங்கும் என்பது நிச்சயம் என அதில் அவர் தெரிவித்து உள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது நடவடிக்கைக்கு பின்னர் பல்வேறு நகரங்களில் வன்முறை பரவி வருகிறது. இந்த சூழலில் இந்த டுவிட்டர் பதிவை அவர் வெளியிட்டு உள்ளார்.
எனினும், டெல்லி போலீசார் தங்களுடைய டுவிட்டரில் இருந்து அளித்த பதிலில், பாகிஸ்தானில் எங்களுக்கு சட்ட அதிகாரம் எதுவும் இல்லாத நிலையில், நாங்கள் பயந்து போயிருக்கிறோம். ஆனால், உங்களது நாட்டில், இணையதள சேவை நிறுத்தப்பட்ட சூழலில், நீங்கள் எப்படி டுவிட் செய்கிறீர்கள்? என அறிந்து கொள்ள விரும்புகிறோம் என தெரிவித்து உள்ளது.
இந்த செய்தியை வெளியிட்ட வெளிநாட்டு பத்திரிகை ஒன்றின் பதிவையும் அவர் இன்று பகிர்ந்து உள்ளார்.