பெய்ஜிங்கில் சீன அரசை எதிர்த்து பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு
சீன அதிபர் பதவி விலக வலியுறுத்தி மேம்பாலத்தில் இருந்து பேனர் ஒன்று கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது.
பெய்ஜிங்,
சீனாவில் ஜி ஜிங்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அரசை எதிர்த்து மிக அரிதாகவே போராட்டங்கள் நடைபெறும் நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் இருக்கும் மேம்பாலம் ஒன்றின் மீது சீன அரசின் கொரோனா தடுப்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீன அதிபர் பதவி விலக வலியுறுத்தியும் பேனர் ஒன்று கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் நெருப்பு மூட்டப்பட்டதையும் சிலர் பார்த்துள்ளனர்.
இதை யார் செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும் போலீசார் அதை உடனடியாக அப்புறப்படுத்தினர். பேனர் வைத்தவர்களை யாரும் நேரில் பார்த்தாக தெரிவிக்காத நிலையில், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் இருந்து சீன அரசு நீக்கி வருகிறது. சில பதிவுகளில் பேனர் வைத்தவர்களின் துணிச்சலுக்கு சிலர் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.