'மிக்கி மவுஸ்' கார்ட்டூன் கதாபாத்திரம் உருவாகி 94 ஆண்டுகள் நிறைவு - நெகிழ வைக்கும் வரலாறு


மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரம் உருவாகி 94 ஆண்டுகள் நிறைவு - நெகிழ வைக்கும் வரலாறு
x
தினத்தந்தி 18 Nov 2022 5:35 PM IST (Updated: 18 Nov 2022 5:38 PM IST)
t-max-icont-min-icon

1928- ஆண்டு வெளியான 'ஸ்மீம்போட் வில்லி' என்ற அனிமேஷன் குறும்படத்தின் மூலம் 'மிக்கி மவுஸ்' அறிமுகமானது.

வாஷிங்டன்,

கார்ட்டூன் உலகில் புகழ் பெற்று விளங்கிய 'வால்ட் டிஸ்னி' நிறுவனம் 'ஆஸ்வால்ட்-தி ரேபிட்' என்ற முயல் கதாபாத்திரத்திற்கு இணையாக புதிய கதாபாத்திரம் ஒன்றை படைக்க விரும்பியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் கதாபாத்திரமாக அது இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது.

அதன்படி வால்ட் டிஸ்னியின் கற்பனை கதாபாத்திரமாக, கடந்த 1928-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி வெளியான 'ஸ்மீம்போட் வில்லி' என்ற அனிமேஷன் குறும்படத்தின் மூலம் 'மிக்கி மவுஸ்' அறிமுகமானது. முதலில் இதற்கு 'மார்டிமர் மவுஸ்' என பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் அது மிக்கி மவுஸ் என்று மாற்றப்பட்டது.

வசனங்கள் எதுவும் இல்லாமல் ஊமை படங்கள் மூலமாகவே நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சார்லி சாப்லின் படங்கள் மூலம் ஈர்க்கப்பட்டு இந்த மிக்கி மவுஸ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறும்புத்தனங்கள் மூலம் குழந்தைகளை கவர்ந்து, அதே சமயம் சுயமாக சிந்திக்கவும் தூண்டும் சுட்டி எலி கதாபாத்திரமாக மிக்கி மவுஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கருப்பு வெள்ளை திரைப்பட காலத்தில் உருவாகி, அதன் பின்னர் அனிமேஷன், மோஷன் கிராபிக்ஸ், லைவ் ஆக்‌ஷன் என பல்வேறு அவதாரங்களை மிக்கி மவுஸ் எடுத்துவிட்டது. இன்று வரை பள்ளி விழாக்களிலும், ஃபேஷன் ஷோக்களிலும், பரிசுப்பொருள் அங்காடிகளிலும் இந்த மிக்கி மவுஸ் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தங்கள் குழந்தைப் பருவத்தை அழகாக்கிய இந்த மிக்கி மவுஸ் கதாப்பத்திரம் இன்று தனது 94-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் நெகிழச்சியான வரலாற்றை விளக்கும் வகையில் டிஸ்னி நிறுவனம், 'மிக்கி-தி ஸ்டோரி ஆஃப் எ மவுஸ்' என்ற குறும்படத்த வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story