கனடாவில் புயலுக்கு 8 பேர் பலி
கனடாவில் புயல் பாதிப்பில் சிக்கி 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 லட்சம் பேர் இருளில் மூழ்கியுள்ளனர்.
டொரண்டோ,
கனடா நாட்டின் ஒண்டாரியோ மற்றும் கியூபெக் ஆகிய இரு மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை மதியம் சக்தி வாய்ந்த சூறாவளி புயல் தாக்கியது. ஏறக்குறைய 2 1/2 மணிநேரம் வீசிய இந்த புயலால் மணிக்கு 132 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இதில் மரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை வேருடன் சாய்ந்தன. பல உலோக கோபுரங்களும் சரிந்தன. இந்த புயலால் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புயல் வீசியதில் பல்வேறு நகரங்களில் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. மரங்கள் சாய்ந்து விழுந்ததில் பலர் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், தேவைப்படுவோருக்கு உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். மின் வினியோகம் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பதிவிட்டு உள்ளார்.
இந்த புயல் பாதிப்பினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் மின் வசதி இன்றி இருளில் மூழ்கி தவித்தனர். எனினும், ஒண்டாரியோவின் மிக பெரிய ஹைட்ரோ ஒன் என்ற மின் வினியோக நிறுவனம் மீண்டும் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு மின் இணைப்புகளை சீராக்கியது.
இதில், 3.6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின் வினியோகம் சீரடைந்தது. எனினும் இன்னும் 2.26 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர். அனைவருக்கும் மின் வினியோகம் கிடைக்க செய்வதற்கான சீரமைப்பு பணிகள் நடந்து முடிய பல நாட்கள் ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.