பாகிஸ்தானில் துப்பாக்கிச்சண்டை: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தாடிவாலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள லக்கி மர்வாட் என்ற இடத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் அப்பாஸ் போலீஸ் சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டி வருவதாகவும், பயங்கரவாத தடுப்பு போலீஸ் படைக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து உள்ளூர் போலீசாருடன் பயங்கரவாத தடுப்பு போலீசார் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர்.
அவர்களைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி பல்வேறு முனைகளில் இருந்தும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். போலீஸ் படையினரும் அவர்களுக்கு தங்கள் துப்பாக்கிகளால் சரியான பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது.
இந்த சண்டையின் முடிவில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் போலீசார் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் என தகவல்கள் கூறுகின்றன. சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம், பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாதிகளுக்கு பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.