ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து.. 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு
2017ல் ஆசாத் ஷாஹர் நகரில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 43 தொழிலாளர்கள் இறந்தனர்.
தெஹ்ரான்:
ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள டாம்கான் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. 400 மீட்டர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த விபத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அப்பகுதியில் 6 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. இன்று காலையில் 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த தொழிலாளர் நலத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு இதே சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
2017ல் ஆசாத் ஷாஹர் நகரில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 43 தொழிலாளர்கள் இறந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோபம் அதிகாரிகள் மீது திரும்பியது குறிப்பிடத்தக்கது.