49,536 கி.மீ. வேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்... பூமிக்கு பாதிப்பு?


49,536 கி.மீ. வேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்... பூமிக்கு பாதிப்பு?
x

பூமியை நோக்கி விமானம் அளவுள்ள விண்கல் ஒன்று 49,536 கி.மீ. வேகத்தில் இன்று நெருங்கி வருகிறது.




நியூயார்க்,



பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியை கடந்து செல்வதுடன், சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்து உள்ளது,

எனினும், அடுத்த 100 ஆண்டுகளில் விண்கல் மோதும் அச்சுறுத்தல் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 2022 ஆர்.கியூ. என்ற பெயரிடப்பட்ட விண்கல் ஒன்று பூமியை இன்று நெருங்கி வருகிறது. மித அளவில் காணப்படும் இந்த விண்கல் மணிக்கு 49 ஆயிரத்து 536 கி.மீ. வேகத்தில் பயணித்து வருகிறது.

அது பூமியை மிக அருகில் நெருங்கும்போது, விண்கல்லுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 37 லட்சம் கி.மீ. அளவில் இருக்கும். 84 அடி அகலம் கொண்ட ஒரு விமானம் அளவுள்ள இந்த விண்கல்லால் என்ன பாதிப்புகள் பூமிக்கு ஏற்படும்?

இதனால் நமது பூமிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றபோதிலும், விஞ்ஞானிகள் தொடர்ந்து அதனை கண்காணித்து வருவார்கள். பூமியில் இருந்து வெகு தொலைவுக்கு செல்லும் வரை இந்த கண்காணிப்பு பணி தொடரும்.

சூரியனை சுற்றி வரும் இந்த விண்கல் ஒரு முழு சுற்று எடுத்து கொள்ள 648 நாட்கள் ஆகும்.

இதுபோன்ற விண்கற்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே அதிக அளவில் பயணித்து வருகின்றன. 10 மீட்டர் முதல் 530 கி.மீ. வரை அளவுள்ள 11.13 லட்சத்திற்கும் கூடுதலான விண்கற்களை இதுவரை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு ஒரு சவாலாக இந்த விண்கற்கள் இருந்தன. பூமியில் வாழ்ந்த டைனோசார் உயிரினங்கள் அழிந்து போனதற்கும் இந்த விண்கற்களே காரணம் என நம்பப்படுகிறது.


Next Story