பூமியை மணிக்கு 47 ஆயிரம் கி.மீ. வேகத்தில் கடந்து சென்ற சிறுகோள்; கேமிராவில் பதிவு
பூமியை மணிக்கு 47 ஆயிரம் கி.மீ. வேகத்தில் 2 கி.மீ. அகலமுள்ள சிறுகோள் ஒன்று கடந்து சென்ற காட்சி கேமிராவில் பதிவாகி உள்ளது.
நியூயார்க்,
சூரிய குடும்பம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானபோது விடுபட்டு போன பெரிய அளவிலான கற்பாறைகள் சிறுகோள்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த சிறுகோள்களுக்கு வளிமண்டலம் கிடையாது.
இதனால், ஏறக்குறைய பெருங்கற்களை போன்று காணப்படும். உருவமும் ஒன்றுக்கொன்று மாறுபடும். சூரியனை நோக்கி அவை அண்டத்தில் சுற்றி கொண்டு உள்ளன.
இவை, பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவை விட 1.3 மடங்கு குறைவான இடைவெளியில் பூமியை நெருங்கி வரும்போது, அவை ஆபத்து விளைவிக்க கூடியவை என வகைப்படுத்தப்பட்டு உள்ளது (பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவு 9.3 கோடி மைல்கள் ஆகும்).
அந்த வகையில் 7335 என பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியை இன்று கடந்து சென்றுள்ளது. அது, அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போன்று 4 மடங்கு உருவில் பெரியது. இந்த ஆண்டில் பூமியை நெருங்கி பறந்து சென்ற மிக பெரிய சிறுகோளும் இதுவே.
இதனை தென்துருவ பகுதியில் உள்ள தொலைநோக்கி ஒன்றின் வழியே படம் பிடித்து உள்ளனர். சூரியனை சுற்றி பல ஆண்டுகளாக சுற்றி வருவதனால் இதனை அப்பல்லோ சிறுகோள் என்றும் அழைக்கின்றனர்.
அடுத்த முறை வருகிற 29ந்தேதி அன்று பூமியை நெருங்கி வரும். அதன்பின்னர் வருகிற 2029ம் ஆண்டு செப்டம்பரில் பூமியை நெருங்கி கடந்து செல்லும். அதன்பின்பு, கூடுதலாக 2055 மற்றும் 2062 ஆகிய ஆண்டுகளிலும் பூமியை நெருங்கியபடி இந்த சிறுகோள் செல்லும்.
கடந்த முறை 1996ம் ஆண்டு இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகே வந்து சென்றது. அப்போது, 40 லட்சம் கி.மீ. தொலைவில் பூமியை கடந்து சென்றது.