2,500 ஆண்டுகள் பழமையான மம்மிக்கள், கடவுள் சிலைகள் எகிப்தில் கண்டெடுப்பு
எகிப்தில் கிறிஸ்துவுக்கு 500 ஆண்டுகள் முன் பழமை வாய்ந்த மம்மிக்கள் அடங்கிய சவப்பெட்டிகள், கடவுள்களின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
கெய்ரோ,
எகிப்தின் தலைநகர் கெய்ரோவின் தெற்கே மெம்பிஸ் நகரருகே சக்காரா என்ற கிராமம் உள்ளது. எகிப்து என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரமிடுகள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த பிரமிடுகள் சக்காராவில் அதிகளவில் காணப்படுகின்றன.
இதனால், கடந்த 1970ம் ஆண்டில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் என்ற தகுதியை இந்த கிராமம் பெற்றது. இங்கே புகழ் பெற்ற கிசா பிரமிடுகளும் காணப்படுகின்றன. இந்த பிரமிடுகளில், அரசர்கள், சாமியார்கள் போன்றோர்ன் உடல்களை பதப்படுத்தி, பாதுகாப்புடன் சவப்பெட்டியில் புதைத்து வைத்துள்ளனர். காலம் கடந்தும் அழியாமல் உள்ள அவை மம்மிக்கள் என அழைக்கப்படுகின்றன.
எகிப்தின் தொல்லியலாளர்கள் தொடர்ந்து பிரமிடுகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 2020ம் ஆண்டில் பார்வையாளர்கள் முன்னிலையில் மம்மி ஒன்றின் சவப்பெட்டியை அவர்கள் வெளியே எடுத்தனர். 2,500 ஆண்டுகள் முன்பு மூடி புதைக்கப்பட்ட அந்த பெட்டியில், மறைந்த சாமியாரின் முகம் தெரியும் வகையில் அலங்கரிக்கப்பட்ட துணியால் மம்மி சுற்றப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் மற்றொரு தொல்லியலாளர்கள் குழு ஒன்று சக்காராவில் இருந்து புதிய சவப்பெட்டி புதையலை கண்டறிந்து உள்ளனர். அவை யாராலும் அறியப்படாத வகையில், கண்டு கொள்ளப்படாமலேயே இருந்துள்ளது. அவை 2,500 ஆண்டுகள் பழமையானவை என நம்பப்படுகிறது. நூற்றுக்கணக்கான பழங்கால எகிப்து கடவுள்களின் சிலைகளையும் அந்த குழு கண்டறிந்துள்ளது.
அனுபிஸ், ஆமுன், மின், ஒசிரிஸ், இசிஸ், நெபர்டம், பாஸ்டட் மற்றும் ஹாதர் ஆகிய கடவுள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, பழமையான 250 கல் சவப்பெட்டிகளும் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி எகிப்து சுற்றுலா மற்றும் பழங்கால பொருட்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சக்காராவில் மம்மிக்களை கொண்டு மூடப்பட்ட, பல வண்ணங்களை கொண்ட மரத்தினால் உருவான 250 சவப்பெட்டிகள், 150 வெண்கல சிலைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
புனித விலங்குகளுக்கான கல்லறைகளில் இருந்து முதன்முறையாக அதிக அளவில் வெண்கல சிலைகள் கிடைத்து உள்ளன. இந்த சவப்பெட்டிகள் நல்ல முறையில் உள்ளன. அவற்றில் மம்மிக்கள் உள்ளன. சிறிய மர பெட்டிகளும் அவற்றுள் உள்ளன.
ரா என்ற சூரிய கடவுளின் பூசாரியாகவும், பாரோ மன்னர் ஜோசரின் பிரமிடு வடிவமைப்புக்கான வடிவமைப்பாளராகவும் இருந்த இம்ஹோடெப் என்பவரின் சிலையும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் அவரது கல்லறையும் கண்டுபிடிக்கப்படும் என கூறப்படுகிறது.