ஹமாஸ் பயங்கரவாதிகளின் பிடியில் 241 பணய கைதிகள்; இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


ஹமாஸ் பயங்கரவாதிகளின் பிடியில் 241 பணய கைதிகள்; இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x

வடக்கு காசா முனை பகுதியில் நடந்த மோதலில், மற்றொரு வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.

இந்த சம்பவத்தில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி இன்று கூறும்போது, காசாவில் 241 இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணய கைதிகள் ஹமாஸ் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளனர்.

இதற்கு முன்பு 242 என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த எண்ணிக்கை திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல. அந்த பகுதியில் ராணுவ விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

இந்த எண்ணிக்கையில், இதற்கு முன் விடுவிக்கப்பட்ட 4 பணய கைதிகள் மற்றும் படையினரால் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவரோ அடங்கமாட்டார்கள் என்று தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் அறிக்கை தெரிவிக்கின்றது.

இதேபோன்று, வடக்கு காசா முனை பகுதியில் நடந்த மோதலில், இதே சாடன் என்ற மற்றொரு வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என படையினர் அறிவித்து உள்ளனர். அவர், 52-வது பட்டாலியனை சேர்ந்த பீரங்கியின் தளபதியாக முன்பு பணியாற்றியவர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

காசா முனை பகுதியில் கடந்த வாரத்தில் இருந்து நடத்தப்பட்டு வரும் தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு 24 ஆக உயர்ந்து உள்ளது.


Next Story