செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் ‘இன்சைட்’ விண்கலத்தின் செயல்பாடுகளை நிறுத்த நாசா முடிவு


செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் ‘இன்சைட்’ விண்கலத்தின் செயல்பாடுகளை நிறுத்த நாசா முடிவு
x
தினத்தந்தி 18 May 2022 4:25 PM IST (Updated: 18 May 2022 4:25 PM IST)
t-max-icont-min-icon

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் இன்சைட் விண்கலம், இந்த ஆண்டு இறுதியில் தனது பணியை நிறைவு செய்ய உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 5-ந் தேதி, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. சுமார் 6 மாத பயணத்திற்குப் பிறகு இந்த விண்கலம் நவம்பர் 26-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு பணியை தொடங்கியது. 

4 ஆண்டுகளாக பல்வேறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பிய இன்சைட் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை துளையிட்டும் ஆய்வு செய்து வருகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட 1,300 அதிர்வுகளையும் இந்த விண்கலம் கண்டறிந்துள்ளது. 

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் மணல் புயலால், இன்சைட் விண்கலத்தின் சூரிய சக்தி தகடுகள் மூடப்படுவதால், அதற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேட்டரிகள் விரைவில் செயலிழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதிர்வுகளை கண்டறியும் நவீன கருவியின் செயல்பாட்டை ஜூலை மாதம் நிறுத்த நாசா முடிவு செய்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து 2022 இறுதியில் இன்சைட் விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 

Next Story