இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு - கட்சித்தலைவர்களுடன் நாளை ஆலோசனை


இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு - கட்சித்தலைவர்களுடன் நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 28 April 2022 5:58 AM IST (Updated: 28 April 2022 5:58 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் அனைத்துக்கட்சிகளும் பங்கேற்கும் இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கொழும்பு,

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆனால் ராஜினாமா செய்ய வலியுறுத்தும், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வரும் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ஆட்சியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.

அதேநேரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன்பெறும் முயற்சிகளை முடுக்கி விட்டு உள்ளனர். அத்துடன் தங்களுக்கு எதிரான அரசியல் நெருக்கடி மற்றும் ெபாதுமக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக அனைத்துக்கட்சிகளுக்கும், சுயேச்சை எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ள அவர், அனைத்துக்கட்சி அரசு அமைக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடு தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக்கட்சி அரசுக்கு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த அனைத்துக்கட்சி அரசின் வடிவம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான மந்திரிசபை விவாதித்து முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ள கோத்தபய ராஜபக்சே, 29-ந்தேதி (நாளை) நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்து உள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், நாட்டில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

அதேநேரம் தான் பதவி விலக மாட்டேன் எனவும், எந்தவித இடைக்கால அரசும் தனது தலைமையில்தான் அமைய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை மேலும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத்தில் இன்னும் எனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. நான் பதவி விலக வேண்டும் என பெரும்பான்மை எம்.பி.க்கள் விரும்பினால் நான் விலகித்தான் ஆக வேண்டும். ஆனால் தற்போது அந்த கேள்விக்கே இடமில்லை.

மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆதரவு மூலமாகத்தான் அரசு அமைத்தோம். எங்களை மாற்றவேண்டும் என மக்கள் விரும்பினால், தேர்தல் மூலம் அதை செய்யட்டும்.

நான் பதவி விலக வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட பிரிவினர் விரும்பினால் அது ஒட்டுமொத்த மக்களின் குரலாக இருக்க முடியாது.

நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க எங்களால் முடிந்த அளவு கடுமையாக உழைத்து வருகிறோம். அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்ய உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் எங்களுக்கு உதவி வருகின்றன.

இவ்வாறு மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், தனக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் செய்திகளுக்கு அவர் பதிலளிக்கையில், ‘நாங்கள் இருவரும் ஓரணியில்தான் இருக்கிறோம். கோத்தபய ராஜபக்சே அதிபர். எனவே அதிபருக்கு உரிய மரியாதையை அவருக்கு நான் கொடுக்க வேண்டும். அவர் எனது இளைய சகோதரராக இருக்கலாம், ஆனால் அது வேறு விஷயம்’ என்று தெரிவித்தார்.

Next Story