ஆஸ்திரேலியா: பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்
ஆஸ்திரேலியாவில் இத்தகைய வன்முறைகள் அரங்கேறுவது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
கான்பெர்ரா,
ஆஸ்திரேலிய நாட்டில் பழங்குடியினரின் இறையாண்மைக்காக கான்பெர்ரா நகரில் போராட்டம் நடைபெற்று வந்தது.
நேற்று நடந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் அங்குள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதில் அந்த கட்டிடத்தின் முன்கதவுகள் தீப்பற்றி எரிந்தன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
ஆஸ்திரேலியாவில் இத்தகைய வன்முறைகள் அரங்கேறுவது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு போராட்டங்களும், வன்முறைகளும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டன.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த சம்பவத்துக்கு பிரதமர் ஸ்காட் மோரீசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஆஸ்திரேலியா இப்படி செயல்படுவதில்லை. இந்த நாட்டின் ஜனநாயக சின்னத்தை ஆஸ்திரேலியர்கள் வந்து தீயிட்டு கொளுத்துவதை பார்க்கும் நடத்தை எனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. திகைத்துப்போய் நிற்கிறேன்” என குறிப்பிட்டார்.
இந்த தீ வைப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்த கட்டிடத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
நாடாளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்டதை அரசு தரப்பு எம்.பி.க்கள் கடுமையாக சாடினர். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அவர்கள் குறிப்பிட்டனர்.
Related Tags :
Next Story