வங்காளதேசத்தில் புதுப்பித்து கட்டப்பட்ட காளி கோவில் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்
வங்காளதேசத்தில் புதுப்பித்து கட்டப்பட்ட ஸ்ரீ ரம்னா காளி கோவிலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.
டாக்கா,
பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சுதந்திர தின பொன்விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக கடந்த 15-ந் தேதி வங்காளதேசத்துக்கு சென்றார். சுதந்திர தின பொன்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிலையில், தனது பயணத்தின் இறுதி நாளான நேற்று டாக்கா நகரின் மையப்பகுதியில், புதுப்பித்து கட்டப்பட்ட ஸ்ரீ ரம்னா காளி கோவிலை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவிலை கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் தீயிட்டு அழித்தனர். கோவிலில் தஞ்சம் அடைந்திருந்த இந்துக்கள், முஸ்லிம்கள் என சுமார் 1,000 பேரை கொன்று குவித்தனர்.
பின்னர், இந்த கோவில் இந்தியா-வங்காளதேச அரசுகள் உதவியுடன் புதுப்பித்து கட்டப்பட்டது. சமீபத்தில் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட கோவில் பகுதியை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அவரையும், அவருடைய மனைவி சவீதா, மகள் சுவாதி ஆகியோரையும் வங்காளதேச மத விவகாரங்களுக்கான மந்திரி பரிதுல் ஆலம்கானும், அர்ச்சகர்களும் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் வங்காளதேச பயணம் முடிவடைந்தது. இதையடுத்து அங்கிருந்து அவர் டெல்லிக்கு புறப்பட்டார்.
Related Tags :
Next Story