முதல் முறையாக விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு நடத்தும் ரஷியா..!
சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.
மாஸ்கோ,
சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. இதற்காக, ரஷியா ஒரு நடிகை மற்றும் ஒரு திரைப்பட இயக்குநரை வெகு விரைவில் விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது.ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹாலிவுட் படம் ஒன்று விண்வெளியில் வைத்து படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த முயற்சி இன்னும் தொடங்கப்படவில்லை. முன்னதாக புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘மிஷன் இம்பாசிபில்’ பட கதாநாயகன் டாம் குரூஸ், நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த திட்டம் குறித்து அறிவித்திருந்தார்.
நடிகை யூலியா பெரிசில்ட் (37 வயது) மற்றும் திரைப்பட இயக்குநர் ஷிபென்கோ (38 வயது) ஆகியோர் பழைய சோவியத்-கசகஸ்தானில் உள்ள பைகோனர் காஸ்மோட்ரோமில் இருந்து வெகுவிரைவில் விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளனர்.
மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் இப்பயணத்துக்கு தலைமை தாங்குகிறார்.அவர்கள் மூவரும் சோயுஸ் எம் எஸ்-19 விண்கலத்தில் 12 நாள் பயணமாக செல்ல உள்ளனர்.அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.
“தி சேலஞ்ச்” என்று அந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.படத்தின் பட்ஜெட் மற்றும் கதைக்களம் போன்ற விஷயங்கள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது ரஷியாவின் விண்வெளி நிறுவனமான ‘ராஸ்காஸ்மோஸ்’ அவற்றை வெளியிட்டுள்ளது.அதன்படி படத்தின் கதையாக, பெண் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று அங்கு ஆபத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரரை பாதுகாக்க உள்ளார். இவ்வாறு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பரிசோதனை முயற்சி என்று படத்தை இயக்க உள்ள இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நாளை புறப்பட உள்ள அவர்கள், அக்டோபர் 17-ம் தேதி அவர்கள் அனைவரும் பூமிக்கு திரும்ப உள்ளனர். அவர்களுடன் விண்வெளி வீரர் ஓலெக் நோவிட்ஸ்கி பூமிக்கு திரும்ப உள்ளார். அவர் கடந்த 6 மாதங்களாக விண்வெளி மையத்தில் தங்கி பணி புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷிய விண்வெளி நிறுவனம் ஊழல் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து வரும் வேளையில், இது போன்ற புது முயற்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷிய நாட்டு அரசியல் ஆய்வாளர் கான்ஸ்டண்டின் கலாச்சேவ் கூறுகையில், ரஷிய விண்வெளி நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளை மக்களுக்கு தெரியவிடாமல் திசை திருப்பவே இது போன்ற முயற்சிகள் நடைபெறுகின்றன என்று கூறியுள்ளார்.
ரஷியா, ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் இருவரை டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த மாதம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், முறையான பயிற்சி இல்லாத நான்கு விண்வெளி வீரர்களை மூன்று நாள் பயணமாக விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தது.அவர்கள் பூமியின் சுற்றுப்பாதையை வலம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி அனைத்து மனிதர்களும் விண்வெளிக்கு செல்லலாம் என்னும் திட்டத்தின் ஒரு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் பெரும் பணக்காரர் ரிச்சர்ட் ப்ரேன்சன் ஆகியோர் ஏற்கனவே விண்வெளிக்கு சென்று வந்து சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story