அஜர்பைஜான்-அர்மீனியா ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல்; 3 வீரர்கள் பலி


அஜர்பைஜான்-அர்மீனியா ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல்; 3 வீரர்கள் பலி
x

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவின் எல்லையில் உள்ள நாகோர்னோ - காராபாக் எனும் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவுகிறது.

இந்த எல்லை பிரச்சினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆயுத மோதலாக உருவெடுத்தது. இருதரப்பு ராணுவத்துக்கும் இடையில் 6 வாரங்கள் இடைவிடாமல் தொடர்ந்த சண்டையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து ரஷியாவின் சமாதான முயற்சியின் பலனாக நவம்பர் மாதம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இந்தநிலையில் நேற்று அஜர்பைஜான்-அர்மீனியா எல்லையில் இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் அர்மீனியா ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதே போல் அஜர்பைஜான் தரப்பில் 2 வீரர்கள் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு இருதரப்பும் ஒன்றை ஒன்று பரஸ்பர குற்றம் சாட்டியுள்ளன.‌ இதற்கிடையில் இந்த மோதலை தொடர்ந்து ரஷியா இரு தரப்பையும் தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தியது. 

அதன்படி ரஷியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அஜர்பைஜான் ராணுவம் அர்மீனியாவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது.

Next Story