கமலா ஹாரிஸ் கடந்து வந்த பாதை......
ஒபாமா ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில் எல்லோரும் அவரை பெண் ஒபாமா என்று செல்லமாக அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
பெண் ஒபாமா- இப்படித்தான் நமது கமலா ஹாரிசை அமெரிக்க மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை ஜனாதிபதி, முதல் கருப்பு துணை ஜனாதிபதி இந்திய வம்சாவளி துணை ஜனாதிபதி என்ற வரலாற்றை அசத்தலாக எழுதி இருக்கிறார், இந்த கமலா ஹாரிஸ்.
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த இந்தப் பெண்ணின் முதல் கனவு, அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாவதுதான். அதற்கான அடியை அவர் எடுத்து வைத்தார். கொஞ்ச காலம் பிரசாரமும் செய்தார். ஆனால் தனது பிரசாரத்தை தொடர போதுமான நிதி ஆதாரம் இல்லை என்பதால் அதை கை விட்டார்.
முதலில் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட அரசு வக்கீல் பதவி வகித்தபோது, அந்தப் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவர்தான், முதல் இந்திய வம்சாவளி பெண்ணும் இவர்தான்.
கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து அதிகாரமிக்க அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த அவையின் முதல் இந்திய வம்சாவளி பெண் உறுப்பினர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இப்போது அவர் அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை ஜனாதிபதி, முதல் இந்திய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி, முதல் கருப்பின பெண் துணை ஜனாதிபதி, முதல் ஆசிய பெண் துணை ஜனாதிபதி.
டொனால்டு டிரம்பை தோற்கடிப்பதற்கான தனது உறுதியான முயற்சியில் கருப்பின வாக்காளர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கமலா ஹாரிசை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக்கினார், ஜோ பைடன்.
ஒபாமா ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில் எல்லோரும் அவரை பெண் ஒபாமா என்று செல்லமாக அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். இதற்கு அடித்தளமிட்டவர், குவென் இபில் என்ற பத்திரிகையாளர்தான். அவர்தான், முதலில் கமலா ஹாரிசை பெண் ஒபாமா என்று அழைத்தவர்.
ஒபாமாவுக்கு கமலா ஹாரிஸ் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார். செனட் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கமலா ஹாரிசை முன் மொழிந்தவர், ஒபாமாதான்.
கமலா ஹாரிசின் அப்பா டொனால்டு ஹாரிஸ், ஜமைக்காவை சேர்ந்தவர். அம்மா, சியாமளா கோபாலன் புற்றுநோய் ஆராய்ச்சியாளராகவும், மனித உரிமை போராளியாகவும் விளங்கியவர்.
கருத்து வேற்றுமையால் டொனால்டு ஹாரிசும், சியாமளா கோபாலனும் விவாகரத்து செய்து கொண்டனர். தன் செல்ல மகள்களான கமலா ஹாரிசையும், மாயாவையும் வளர்க்கும் பொறுப்பை சியாமளா கோபாலன் சுமந்தார்.
தனது சுய சரிதையில் இதை கமலா ஹாரிஸ் குறிப்பிடத்தவற வில்லை. “என் அம்மா 2 கருப்பு மகள்களை வளர்க்கிறார் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். தான் தத்தெடுத்த தாயகமான அமெரிக்கா, மாயாவையும் என்னையும் கருப்பின பெண்களாகத்தான் பார்க்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். நாங்கள் நம்பிக்கையுள்ள, பெருமைக்குரிய கருப்பின பெண்களாக வளர்வோம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்” என அதில் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் ஒக்லாந்தில் பிறந்தார். பெர்க்லியில் வளர்ந்தார். அவர் தனது பள்ளி படிப்பை பிரெஞ்சு மொழி பேசும் கனடாவில் கழித்தார். அவரது அம்மா, சியாமளா கோபாலன் அப்போது மாண்ட்ரீலில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருந்தார்.
அவர், தனது மகள் கமலா ஹாரிசிடம் அடிக்கடி சொல்கிற வார்த்தைகள் உண்டு. அந்த வார்த்தைகள், “சும்மா உட்கார்ந்து கொண்டு எதையாவது பற்றி புகார்செய்து கொண்டிருக்காதே. எதையாவது செய்” என்பதுதான்.
கமலா ஹாரிஸ், ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் படித்தார். அதன்பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம் சென்று சட்டம் படித்தார்.
அதைத் தொடர்ந்து அலமேடா கவுண்டியில் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் தன் பணியை தொடங்கினார்.
சான்பிரான்சிஸ்கோவில் 2003-ம் ஆண்டு, முன்னணி அரசு வக்கீல் ஆனார். 2010-ம் ஆண்டு, அவர் கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாக உயர்ந்தார்.
அந்த காலகட்டத்தில் அவர் ஜனநாயக கட்சியில் புகழ்பெற்ற நட்சத்திரமாக ஜொலிக்க தொடங்கினார்.
2017-ம் ஆண்டு அவர் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
கமலா ஹாரிசின் தனிப்பட்ட குடும்பம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?
அவரது கணவர், டக்ளஸ் எம்ஹாப். வக்கீலான இவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கமலா ஹாரிஸ் திருமணம் செய்து கொண்டார். எலா மற்றும் கோல் என்னும் 2 குழந்தைகளுக்கு கமலா ஹாரிஸ் சித்தியும் ஆவார்.
கமலா ஹாரிசுடன் இணைந்து பணியாற்றப்போவதில் தான் மிகவும் பெருமைப்படுவதாக ஜோ பைடன் கூறி இருக்கிறார்.
இந்த கமலா ஹாரிஸ், 2024-ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், அந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி, முதல் இந்திய வம்சாவளி பெண் ஜனாதிபதி என்ற இலக்கையும் அடையும் வாய்ப்புகள் பிரகாசம். ஆமாம், அதற்கான முயற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு அவரிடம் இருக்கிறது. எனவே அவர் அமெரிக்காவில் புதிய சரித்திரத்தை படைக்கத்தான் போகிறார். உலகம் பார்க்கத்தான் போகிறது.
Related Tags :
Next Story