துருக்கியில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு


துருக்கியில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு
x
தினத்தந்தி 3 Nov 2020 1:45 AM IST (Updated: 3 Nov 2020 1:06 AM IST)
t-max-icont-min-icon

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது.

அங்காரா,

துருக்கி நாட்டில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு 3.77 லட்சம் பேர் ஆளாகி உள்ளனர்.  இது தவிர்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், அந்த நாட்டில் மற்றொரு சோக நிகழ்வு நடந்துள்ளது.  துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஈஜியன் கடல் பகுதியில் கடந்த வெள்ளி கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன.

இங்கு 40க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன.  இதுதவிர ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.  கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.  இதனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 நாட்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து 2 சிறுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில் அங்கு பலி எண்ணிக்கை 81 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

Next Story