அமெரிக்காவில் மேலும் ஒரு தடுப்பூசி சோதனை நிறுத்தம்: செலுத்திக்கொண்டவரின் உடல்நலம் பாதிப்பு எதிரொலி


அமெரிக்காவில் மேலும் ஒரு தடுப்பூசி சோதனை நிறுத்தம்: செலுத்திக்கொண்டவரின் உடல்நலம் பாதிப்பு எதிரொலி
x
தினத்தந்தி 14 Oct 2020 4:45 AM IST (Updated: 14 Oct 2020 3:20 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க நாட்டில் மேலும் ஒரு தடுப்பூசி சோதனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. செலுத்திக்கொண்ட ஒருவரது உடல்நிலையில் திடீரென ஏற்பட்ட பாதிப்பே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, அமெரிக்க வல்லரசை ஆட்டிப்படைத்து வருகிறது. அங்கு 80 லட்சம் பேருக்கு மேல் வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், 2.20 லட்சம் பேர் அதற்கு இரையாகி உள்ளனர்.

இதற்கிடையே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் சேர்ந்து உருவாக்கி உள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனை, அமெரிக்காவில் நடந்து வந்தது. ஆனால் அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஒரு பெண்ணுக்கு அவருடைய முதுகெலும்பில் அரிதான அழற்சி பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் இந்த தடுப்பூசியின் சோதனை மீண்டும் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் அங்கு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து வந்தனர். இந்த சோதனையும், நேற்று முன்தினம் திடீரென நிறுத்தப்பட்டது.

இதையொட்டி அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும்போது, அதிலும் குறிப்பாக ஏராளமான எண்ணிக்கையிலானவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிறபோது உடல்நலக்குறைவுகள், விபத்துகள் மற்றும் பிற பாதகமான விளைவுகள் எதிர்பார்க்கப்படுவதுதான். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு திடீரென ஏற்பட்டுள்ள விவரிக்க முடியாத உடல்நலக்குறைவுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய டாக்டர்கள், பாதுகாப்பு கண்காணிப்பு குழுவினர் ஆராய்வார்கள்” என கூறி உள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் அந்தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டிய காரணத்தால் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தார் கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. இந்த நிறுவனத்தினர் தங்கள் தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையின்போது, 60 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதிக்க திட்டமிட்டு செயலில் இறங்கி இருந்தனர். இந்த தடுப்பூசியை ஒருமுறை ஒருவர் செலுத்திக்கொண்டாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பைஸர் மருந்து நிறுவனம் ஒரு தடுப்பூசியை உருவாக்கி அதன் கடைசி கட்ட மருத்துவ பரிசோதனையை 30 ஆயிரம் பேருக்கு நடத்த தீர்மானித்தது.

பின்னர் இந்த எண்ணிக்கையை 44 ஆயிரமாக அதிகரித்தது.

இப்போது, இந்த நிறுவனம் தனது தடுப்பூசியின் கடைசி கட்ட பரிசோதனை திட்டத்தில் ஒரு மாற்றத்தை செய்துள்ளது. தனது சோதனையில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர், சிறுமியரையும் சேர்த்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அளித்துள்ளது.

ரஷியாவில் ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசி தயாரித்து அதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த தடுப்பூசியை தான் போட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ரஷிய அறிவியல் அகாடமியின் தலைவர் அலெக்சாண்டர் செர்ஜியேவ் கூறி உள்ளார்.

இந்த தடுப்பூசியை ரஷிய ராணுவ மந்திரி செர்கெய் சோய்கு, மாஸ்கோ நகர மேயர் செர்கெய் சோபியானின் உள்ளிட்டோர் ஏற்கனவே போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story