கொரோனா வைரஸ் பிடியில், வாழ்வாதாரங்களை பாதுகாப்பதை விட உயிரை காப்பாற்றிக்கொள்வது இப்போது முக்கியம் - சர்வதேச வல்லுனர்கள் கருத்து


கொரோனா வைரஸ் பிடியில், வாழ்வாதாரங்களை பாதுகாப்பதை விட உயிரை காப்பாற்றிக்கொள்வது இப்போது முக்கியம் - சர்வதேச வல்லுனர்கள் கருத்து
x
தினத்தந்தி 5 April 2020 1:25 AM IST (Updated: 5 April 2020 1:25 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பிடிக்கு மத்தியில் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதை விட, உயிரை காப்பாற்றிக்கொள்வது இப்போது முக்கியமாக அமைந்து இருக்கிறது என சர்வதேச வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ஜெனீவா, 

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியின் முன் உலகமே அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவே திணறிக்கொண்டிருக்கிறது.

இந்த வைரஸ் பாதிப்புக்கு, உலக அளவில் ஆளானவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது, இன்னொரு புறம் பலியானவர்களின் எண்ணிக்கையும் 59 ஆயிரத்தை எட்டி இருக்கிறது.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி அளவினர், தங்கள் நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், கொரோனா பிடியில் இருந்து உயிரைக்காப்பாற்றிக் கொள்ளவும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்துள்ளனர். கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரங்களை இழந்து அல்லலுற்று வருகிறார்கள். உலக பொருளாதாரமே முடங்கிப்போய் உள்ளது.

இதையொட்டி உலக சுகாதார நிறுவனம் ‘ஹூ’வின் தலைவரான டெட்ரோஸ் அதானோமும், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜார்ஜீவாவும் கூட்டாக, இங்கிலாந்தில் இருந்து வெளிவருகிற ‘தி டெய்லி டெலகிராப்’ நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதி உள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

வாழ்வாதாரங்களை (வேலைகளை) பாதுகாத்துக்கொள்வதை விட உயிரைக்காப்பாற்றிக்கொள்வது இப்போது முன்நிபந்தனையாக அமைந்திருக்கிறது.

பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்றால் முதலில் கொரோனா வைரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாக வேண்டும்.

கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் எல்லாம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு நாடும் இதன் பரவலை கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று கருதி அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதற்காக நாடுகள் எல்லாம் தங்கள் சமூகத்தையும், பொருளாதாரத் தையும் செயல்பாட்டில் இருந்து நிறுத்தி வைத்துள்ளன. இது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நாடுகள் கொடுக்கிற விலையாக அமைந்துள்ளது. ஒன்று உயிரைக்காப்பாற்ற வேண்டும் அல்லது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இது ஒரு குழப்பமான நிலை ஆகும்.

பல நாடுகளில் குறிப்பாக ஏழை நாடுகள், கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு, அந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் இல்லை. எல்லா நாடுகளும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்கு அதிகமாக செலவிட முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உலக அளவிலான சுகாதார நெருக்கடியின் போக்கும், உலக பொருளாதாரத்தின் தலைவிதியும் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. பொருளாதாரம் மீள்வதற்கு, கொரோனா வைரசுக்கு எதிராக போரிட வேண்டியது அவசியம் ஆகிறது.

இது மனித இனத்தில் மிகவும் இருண்ட தருணம் ஆக இருக்கிறது. வளர்ந்து வரும் சந்தைகளில், வாழ்கிற மக்களுக்காக தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரின் கூட்டு வேண்டுகோளாக இருக்கிறது.

நிதி நிலைமைகள் இறுக்கமாக அமைந்துள்ள நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள் தொழிலாளர்களையும், தொழில் நிறுவனங்களையும், பொருட்கள் வினியோக தொடரையும் பாதித்ததால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் 85 நாடுகள் சர்வதேச நிதியத்தின் அவசர நிதி உதவியை கேட்டு உள்ளன. அவசர காலத்துக்கு பயன்படுத்த வேண்டிய நிதியின் அளவை சர்வதேச நிதியம் 50 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலராக (சுமார் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக) உயர்த்தி உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தமட்டில், முக்கிய மருந்துப்பொருட்கள், சாதனங்களை நாடுகள் கொள்முதல் செய்வதற்கு முன்கூட்டியே கொள்முதல் ஒப்பந்தங்களை எளிதாக்கி, ஒருங்கிணைக்கிற வேலையை செய்யும். குறைவான நேரமும், எல்லைக்குட்பட்ட வளங்களுமே இருக்கிற சூழலில், நாம் ஒன்று பட்டு செயல்பட்டு, உயிர்களையும், வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதற்கு சரியான முன்னுரிமை அளிக்க கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story