சர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீரால் கிடுகிடுவென பரவிய கொரோனா
தென்கொரியாவில் சர்ச் ஒன்றில் தெளிக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சியோல்,
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,000 தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் அதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
இந்தநிலையில் தென் கொரியாவில் உள்ள சியோங்னமில் உள்ள தேவாலயத்தில் மார்ச் 8ம் தேதி, கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் 90 பேர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். வழிபாட்டின் முடிவில் அனைவருக்கும் ஒரே பாட்டிலில் புனித நீர் வழங்கப்பட்டது. பாட்டிலில் இருந்த புனிதநீரை வாய்க்குள் படும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் உடல்நிலை சரியில்லாத நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்களில் பாதிரியார், அவரது மனைவி உட்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
புனித நீரை கையால் தொட்டு பாதிரியார் வாயில் ஊற்றி உள்ளார். இதன் மூலம் கொரோனா பரவியது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பாதிரியார் கிம் கூறுகையில், நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லா பழியையும் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story