வணிக வளாக தீயில் 64 பேர் பலி எதிரொலி: ரஷியாவில் கவர்னர் ராஜினாமா


வணிக வளாக தீயில் 64 பேர் பலி எதிரொலி: ரஷியாவில் கவர்னர் ராஜினாமா
x
தினத்தந்தி 1 April 2018 11:00 PM (Updated: 1 April 2018 7:53 PM)
t-max-icont-min-icon

வணிக வளாக தீயில் 64 பேர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக ரஷியாவில் கெமெரோவோ பிராந்திய கவர்னர் அமன் டுலியெவ் பதவி விலகி உள்ளார்.

மாஸ்கோ,

ரஷிய நாட்டில் கெமெரோவோ நகரத்தில் உள்ள ‘வின்டர் செர்ரி’ என்னும் வணிக வளாகத்தில் கடந்த 25-ந் தேதியன்று தீப்பிடித்தது. இந்தத் தீ அங்கு உள்ள குழந்தைகள் பொழுதுபோக்கு அரங்கு, திரையரங்குக்கு பரவியது.

இந்தத் தீ விபத்தில் சிக்கி 40 குழந்தைகள் உள்ளிட்ட 64 பேர் கருகி பலியாகினர்.

ரஷியாவை உலுக்கிய இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் தீ விபத்துக்களின்போது, அவசரமாக வெளியேற வேண்டிய வழிகள் அடைக்கப்பட்டிருந்தது அம்பலத்துக்கு வந்தது. அசாதாரண நிகழ்வின்போது, பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்க அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி இயக்கப்படவில்லை. எச்சரிக்கை மணி உடைந்து போய் இருந்தது. இதெல்லாம் விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி கருத்து சொன்ன ரஷிய அதிபர் புதின், அதிகாரிகளின் அலட்சியப்போக்குதான் இந்த விபத்துக்கு காரணம்; சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து வணிக வளாகத்தின் நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கெமெரோவோ பிராந்திய கவர்னர் அமன் டுலியெவ் (வயது 73) பதவி விலகி உள்ளார். அவரது ராஜினாமாவை அதிபர் புதின் ஏற்றுக்கொண்டு விட்டார் என கிரெம்ளின் மாளிகை (அதிபர் மாளிகை) அறிவித்து உள்ளது.

தனது பதவி விலகல் குறித்து அமன் டுலியெவ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “ மிகுந்த மனச்சுமையுடன் கவர்னராக பணியாற்ற முடியாது. தார்மீக அடிப்படையில் அது சாத்தியம் இல்லை” என கூறி உள்ளார்.


Next Story