ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் பதவி பறிக்கப்பட்டால் அவருடைய தம்பியை பிரதமராக்க முடிவு


ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் பதவி பறிக்கப்பட்டால் அவருடைய தம்பியை பிரதமராக்க முடிவு
x
தினத்தந்தி 22 July 2017 10:29 AM (Updated: 22 July 2017 10:29 AM)
t-max-icont-min-icon

பனாமா கேட் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் பதவி பறிக்கப்பட்டால் அவருடைய தம்பியை பிரதமராக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இஸ்லாமாபாத்,

பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், சட்டத்துக்கு புறம்பாக வெளிநாடுகளில் ரகசியமாக முதலீடுகள் செய்தும், வங்கிகளில் பணத்தை பதுக்கியும் ஊழல் செய்துள்ளதாக சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்ட தகவல்கள், உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த ஊழல் ‘பனாமா கேட் ஊழல்’ என அழைக்கப்படுகிறது. இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் சிக்கி தவிக்கின்றனர். 

இதில் அவரது பதவியைப் பறிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி) தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகிய 4 பேர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கினை நீதிபதி இஜாஸ் அப்சல் தலைமையில் நீதிபதிகள் ஷேக் அஜ்மத் சயீத், இஜாசுல் அசன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கூட்டு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பு ‘எப்.ஐ.ஏ.’யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களை கொண்ட கூட்டு விசாரணைக்குழு அமைத்து, விசாரணை நடந்தது.  இந்தக் குழுவினர் தங்களது அறிக்கையை கடந்த 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

விசாரணை முடிந்ததும் நீதிபதி இஜாஸ் அப்சல் தலைமையிலான அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இதற்கிடையே நவாஸ் செரீப்புக்கு சிக்கல் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் உயர் மட்டக் குழு கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் உடனடியாகக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவரது தம்பியும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷெபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள மந்திரிகள், ஆலோசகர்கள், சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில் எழுந்துள்ள சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

 வழக்கு நிலவரம் குறித்து நவாஸ் ஷெரீப்பிடம் சட்ட வல்லுனர்கள் விரிவாக எடுத்துக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் பதவி பறிக்கப்பட்டால், அவரது தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை ஏற்பது என முடிவு எடுக்கப்பட்டதாகவும் மீடியா தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் நவாஸ் செரீப் தலைமையிலே ஆட்சி நடைபெறும் என கட்சியின் தரப்பில் அந்த தகவல்கள் மறுக்கப்படுகிறது. பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருக்கும் ஷெபாஸ் பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினராக இல்லை எனவே அவர் உடனடியாக பதவியேற்பது என்பது எளிதான காரியம் கிடையாது.
 
தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகிய பின்னரே பிரதமர் ஆக முடியும். இதனால் இடைக்காலத்தில் 45 நாட்களுக்கு ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் பிரதமர் பதவியை ஏற்க வாய்ப்பு உள்ளது என பல்வேறு தகவல்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் பிரதமர் நவாஸ் ஷெரீப் நான் மக்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பதவி விலக மாட்டேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story