வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு - குண்டு பாய்ந்து 2 பேர் பலி


வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு - குண்டு பாய்ந்து 2 பேர் பலி
x

வாஷிங்டனில் தெருவில் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை தொடர்கதையாய் நீளுகிறது. நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 12.50 மணிக்கு அந்த நாட்டின் தலைநகரான வாஷிங்டனின் வடக்கு கேப்பிட்டல் மற்றும் வடமேற்கு பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் படையினர் மின்னல் வேகத்தில் விரைந்தனர்.

அங்கு துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து 2 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தும், 3 பேர் படுகாயம் அடைந்தும் இருப்பதை கண்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் நிலைமை தெரியவில்லை. கொல்லப்பட்டவர்களும், படுகாயம் அடைந்தவர்களும் பெரியவர்கள் ஆவார்கள்.

போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் 2 சந்தேக நபர்கள் ஒரு சிறிய கருப்பு நிற சொகுசு காரில் வந்து ஒரு கட்டிடத்தின் முன்பாக நின்று, தெருவில் உள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கியதாக தெரியவந்தது. துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு அவர்கள் சம்பவ இடத்தை விட்டு சிட்டாகப்பறந்து விட்டனர்.

இந்த சம்பவத்தின் நோக்கம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஆஷன் பெனிடிக்ட் கூறும்போது, இது போதைப்பொருள் சந்தை தொடர்பான சம்பவமாக தெரிகிறது. இந்தப்பகுதியை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். போதைப்பொருள் வைத்திருந்ததாக பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

எனினும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், தலைநகர் வாஷிங்டனை அதிரவைத்துள்ளது.


Next Story