ரஷியாவில் ஓட்டல் தீ விபத்தில் 15 பேர் பலி
ரஷியாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓட்டலில் வாக்குவாதம்
ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இருந்து 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பழமையான நகரம் கோஸ்ட்ரோமா. இடைக்கால கட்டிடக்கலை மற்றும் மடாலயங்களுக்கு பெயர்போன இந்த நகரில் மிகப்பெரிய ஓட்டல் ஒன்று உள்ளது.
மதுபான விடுதியுடன் அமைந்துள்ள ஓட்டலுக்கு நேற்று வழக்கம் போல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து மது அருந்தியும், உணவை ருசித்து சாப்பிட்டு கொண்டும் இருந்தனர்.
அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்களில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்களில் ஒருவர், ஆபத்து காலங்களில் 'சிக்னல்' கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் பிளேர் துப்பாக்கியால் சுட்டார்.
கொழுந்துவிட்டு எரிந்த தீ
துப்பாக்கியில் இருந்து வந்த நெருப்பால் ஓட்டலில் தீப்பற்றியது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்இமைக்கும் நேரத்தில் ஓட்டல் முழுவதிலும் பரவியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.
ஓட்டலில் தீப்பற்றிய சமயத்தில் சுமார் 300 பேர் வரை அங்கிருந்ததாக தெரிகிறது. அவர்கள் அலறியடித்தப்படி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையில் தீ விபத்தை தொடர்ந்து ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வாடிக்கையாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
15 பேர் உடல் கருகி பலி
அதேபோல் ஓட்டலின் நாலாபுறமும் தீ சூழ்ந்த காரணத்தால் பலர் வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கினர். இதனிடையே இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதே வேளையில் பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். ஓட்டலுக்குள் சிக்கியிருந்த 250 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
எனினும் இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 15 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் பிளேர் துப்பாக்கியை பயன்படுத்திய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு ரஷியாவின் பெர்ம் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் பட்டாசுகளை வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.