மெக்சிகோவில் உள்ள குரேரோ மாகாணத்தில் ஒரே நாளில் 12 பேர் கொலை
மெக்சிகோவில் நடந்த இந்த சம்பவம் பற்றி குரேரோ மாகாண போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோவின் குரேரோ மாகாணத்தில் பல பகுதிகள் போதைப்பொருள் கடத்தலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணத்தில் அடிக்கடி போதைப்பொருள் குழுக்கள் இடையே மோதல் ஏற்படுவதால் அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குரேரோ மாகாணத்தில் உள்ள அகாபுல்கோ நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
அகாபுல்கோ நகராட்சிக்கு உட்பட்ட ரிசார்ட்டின் அகுவாஸ் பிளான்காஸ் ரவுண்டானாவுக்கு அருகே 4 ஆண்கள் மற்றும் 2 பெண்களின் உடல்கள் பல துப்பாக்கிச்சூடு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்களில் பலரின் உடல்களில் சித்திரவதை செய்த அறிகுறிகள் தெரியவந்துள்ளன.
இதற்கிடையே, அகாபுல்கோவின் புறநகர் பகுதியில் உள்ள ரிக்கார்டோ புளோரஸ் மாகோன் மாவட்டத்தில் ஏறக்குறைய ஒரே நேரத்தில் நிகழ்ந்த 2 ஆயுத தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இந்த வன்முறை செயல்களுக்கு முன்னதாக, பிரபல ஓட்டல் கோல்டன் சோனுக்கு அருகிலுள்ள இகாகோஸ் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இதேபோல அகாபுல்கோ ட்ரடிஷனல் என்ற ஓட்டலின் பழைய கட்டிடத்தில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் போதைப்பொருள் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலால் நடைபெற்றதா? என்ற கோணத்தில் குரேரோ மாகாண போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.