திடீர் வெள்ளத்தால் பாலம் இடிந்து விபத்து - 11 பேர் பலி


திடீர் வெள்ளத்தால் பாலம் இடிந்து விபத்து - 11 பேர் பலி
x

நெடுஞ்சாலை பாலம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

பிஜீங்,

சீனாவின் ஷங்ஜீ மாகாணம் ஷங்லோ நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்நகரின் ஹசுய் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹசுய் பகுதியில் பாயும் ஜின்கியூன் ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேம்பாலத்தில் கார், பைக்குகள் பயணித்து வந்தன.

ஆனால், கனமழை காரணமாக ஜின்கியூன் ஆற்றில் நேற்று மாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில், மேம்பாலத்தில் கார், பைக்குகளில் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலரும் உயிரிழந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


Next Story