ஜோர்டனில் கட்டிட விபத்தில் சிக்கிய 10 மாத குழந்தை - சிறிய காயமும் இன்றி உயிர்தப்பிய அதிசயம்
கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கைக்குழந்தை ஒன்று 24 மணி நேரத்திற்குப் பிறகு சிறிய காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டது.
அம்மான்,
ஜோர்டன் நாட்டின் தலைநகர் அம்மானில், 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் கட்டிடத்தில் இருந்தவர்களில் 10 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கட்டிட இடிபாடுகளை அகற்றிம் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. விபத்து நடந்து சுமார் 24 மணி நேரங்களுக்குப் பிறகு, மீட்புப் படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிர் தப்பிய 10 மாத குழந்தை ஒன்றை பத்திரமாக மீட்டனர்.
விபத்து நடந்த சமயத்தில் குழந்தையின் தாய் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இது தவிர ஒரு 45 வயது நபரும் இடிபாடுகளில் இருந்து சில காயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த கட்டிடத்தின் மேலாளர் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.