வங்கிகளில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவோம் - நிர்மலா சீதாராமன்
வங்கிகளில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பணத்தையும் திரும்பப் பெறுவோம் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் காஷ்மீருக்கு சென்றார். முதலில், ஸ்ரீநகரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, நேற்று ஜம்மு நகருக்கு சென்றார். அங்கு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். கடன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
“கடந்த 2014-ம் ஆண்டு, மோடி அரசு பதவிக்கு வந்தபோது வாராக்கடன் கவலைக்குரிய அம்சமாக இருந்தது. வாராக்கடனை மீட்பதற்கு நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன்களை தந்தன. வங்கியில் கடன் பெற்று விட்டு அதை திருப்பிச் செலுத்தாதவர்களை துரத்தினோம். அவர்கள் இந்தியாவில் இருந்தாலும், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருந்தாலும் விடவில்லை.
அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டன. அவை சட்டரீதியாக விற்கப்பட்டோ, ஏலம் விடப்பட்டோ கிடைத்த பணத்தை வங்கியிடமே திருப்பி ஒப்படைத்தோம். இந்த பணி தொடர்ந்து நடைபெறும். வங்கிகளில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பணத்தையும் திரும்பப் பெறுவோம். வங்கியில் இருந்து பெறப்பட்ட பணத்தை வங்கியிடம் மீண்டும் சேர்க்க வைப்போம்.”
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story