சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வாபஸ்..!


சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வாபஸ்..!
x
தினத்தந்தி 12 Nov 2021 5:38 AM IST (Updated: 12 Nov 2021 5:38 AM IST)
t-max-icont-min-icon

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று மாலை பலத்த காற்றுடன் கரையை கடந்தது.

சென்னை, 

வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந் தேதி தமிழகத்தில் தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலம் வடகிழக்கு பருவமழை காலமாக வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்படுகிறது. அந்தவகையில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் வரை நீடித்தாலும், அந்த மாதத்தில் பதிவான மழை அளவு வடகிழக்கு பருவ மழை காலத்தில் பதிவான அளவுகளாகதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அந்தவகையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 22 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதன்பின்னர் இந்த மாதம் (நவம்பர்) ஆரம்பத்தில் இருந்து பருவமழை தமிழகத்தில் வெளுத்து வாங்க தொடங்கியது. அந்தவகையில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவு முதல் 7-ந்தேதி காலை வரை சென்னையில் 23 செ.மீ. வரை மழை வெளுத்து வாங்கியது. அதற்கு அடுத்த நாள் தமிழகத்தில் சில இடங்களில் மிக கனமழையும் பொழிந்தது.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த தாழ்வுப்பகுதி அதற்கு அடுத்தநாள் (நேற்று முன்தினம்) தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதே நாள் இரவில் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அதன்படி, 9-ந்தேதியன்று நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழை கொட்டியது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தாம்பரம், சோழவரம், எண்ணூர் ஆகிய இடங்களில் அதி கனமழை பதிவாகி இருந்தது.

முன்னதாக இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக கரையை கடக்கும் பகுதிகள் மாறியது. அதன்படி, மாமல்லபுரத்துக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கடக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால் அதுவும் பின்னர் மாறியது. நேற்று முன்தினம் ஆய்வு மையத்தின் அறிவிப்பில், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இடையில் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என்றும், அந்த நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த அறிவிப்பின்படி, நேற்று காலையில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட சில இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசியது. தரைக்காற்று பலமாக இருந்ததால், சென்னை உள்பட கடலோர பகுதிகளிலும் கடல் சீற்றத்துடனேயே காணப்பட்டது. கடல் அலையானது 3 அடி முதல் 5 அடி உயரம் வரை ஆர்ப்பரித்து கரையில் மோதியதை பார்க்க முடிந்தது.

ஏற்கனவே சென்னை வெள்ளக்காடான நிலையில் நேற்று முன்தினத்தில் இருந்து தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது. இதுதவிர புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் மதியம் தொடங்கிய மழை நேற்று 3 மணி வரை நீடித்தது. இவ்வாறு சுமார் 30 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

அதேசமயம் பிற்பகல் 2 மணிக்குமேல் சென்னையில் மழை பெய்வது குறைந்துவிட்டது. ஆனால் அதே சமயத்தில் காற்றின் வேகம் குறையாமலேயே இருந்தது. சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் உள்பட கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றினால் மணற்பரப்பில் இருந்த மணல், சுற்றுச்சாலை பகுதியில் சிதறி கிடந்தன.

மாலை 5 மணியளவில் ஆய்வு மையம் தெரிவித்தபடி, சென்னை அருகே தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது. சுமார் 2 மணி நேரமாக சென்னை பகுதியை தாழ்வு மண்டலம் முழுவதுமாக கடந்து சென்றதாக கூறப்பட்டது.

‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வாபஸ்

தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது, சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் அதி கனமழை இருக்கும் என்று கூறி ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது பெரியஅளவில் மழை இல்லாததால் இந்த எச்சரிக்கையை ஆய்வு மையம் விலக்கிக்கொண்டது.

ஏற்கனவே சென்னையில் மழை வெளுத்து வாங்கி, ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில், அதி கனமழையுடன் தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று ஏற்கனவே கூறியதை நினைத்து சென்னைவாசிகள் அச்சத்துடன் இருந்தனர். ஆனால் எந்த கனமழையும் இல்லாமல், தரைக்காற்று மட்டும் வீசியபடி தாழ்வு மண்டலம் கரையை கடந்ததையடுத்து அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடந்த பிறகு வலுவிழந்தது. வலுவிழந்த நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) படிப்படியாக மழை குறையும் என்று ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தாழ்வுப்பகுதி உருவானது முதல் கரையை கடந்தது வரை...

* தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

* தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று முன்தினம் (புதன்கிழமை) வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்தது.

* நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது.

* நேற்று காலை 5.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், 10 மணிக்கு 160 கி.மீ. தொலைவிலும், 11.30 மணிக்கு 130 கி.மீ. தொலைவிலும், பிற்பகல் 1 மணிக்கு 100 கி.மீ. தொலைவிலும், 2.30 மணிக்கு 80 கி.மீ. தொலைவிலும், 3.30 மணிக்கு 50 கி.மீ. தொலைவிலும், 5 மணிக்கு 30 கி.மீ. தொலைவில் இருந்தபடி சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது.

* சுமார் 2 மணி நேரம் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாக கூறப்பட்டது.

* அதி கனமழையோடு, தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், மழை எதுவும் இல்லாமல், தரைக்காற்றுடன் மட்டும் கரையை கடந்து இருக்கிறது.

மெரினா கடற்கரையில் ஆபத்தை உணராமல் குவிந்த மக்கள்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக சென்னை அருகே நேற்று இரவு கரையை கடந்தது. இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதிகளில் மக்கள் நடமாடவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது.

ஆனாலும் நேற்று ஆபத்தை உணராமல் மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். பொங்கி வரும் கடல் அலைகளை செல்போனில் புகைப்படமும், ‘செல்பி’யும் எடுத்து கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதேபோல அடையாறு மேம்பாலம் உள்ளிட்ட மழைநீர் கரைபுரண்டு ஓடும் பகுதிகளிலும் இளைஞர்கள் அதிகளவில் திரண்டு ‘செல்பி’ எடுத்து சென்றனர். பேரிடர் போன்ற இச்சூழலிலும் ஆபத்தை உணராமல் நடந்து கொண்ட இளைஞர்களின் இந்த போக்கு பொதுமக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

செல்லப்பிராணிகள், கால்நடைகள் தவிப்பு

சென்னையில் பெய்து வரும் கனமழை மக்களை வாட்டி வதைத்து வருகிறது என்றால் அது மிகையல்ல. மனிதர்கள் படும் அதே அளவு கஷ்டங்களை நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளும், கால்நடைகளும் அனுபவித்து வருகின்றன என்பதே உண்மை.

மழைநீரில் தத்தளித்து மேடான இடங்களிலும், கிடைக்கும் அட்டை பெட்டிகளிலும், குப்பை கழிவுகளிலும் தவித்து கொண்டிருக்கும் செல்லப்பிராணிகளையும், கால்நடைகளையும் கண்டாலே மனம் பதறி போகிறது. 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது ஏராளமான கால்நடைகள் செத்து மிதந்ததை யாரும் மறந்துவிட முடியாது.

அதன் எதிரொலியாகவே கடந்த ஆண்டு மழைக்காலத்தின்போது தீயணைப்பு துறையினரும், புளூகிராஸ் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு 60-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளை மீட்டனர். அதுபோலவே தற்போதைய மழைக்காலத்திலும் துரித நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

Next Story