புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை மேம்படுத்த கோட்ட மேலாளர் ஆய்வு


புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை மேம்படுத்த கோட்ட மேலாளர் ஆய்வு
x

அம்ரித் பாரத் திட்டத்தில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை மேம்படுத்த கோட்ட மேலாளர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை

கோட்ட மேலாளர் ஆய்வு

நாடு முழுவதும் பல்வேறு ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்ரித் பாரத் எனும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆனந்த் நேற்று புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

பின்னர் ரெயில் நிலையத்தில் நடைமேடை, வளாக பகுதி, ரெயில் நிலையத்தையொட்டியுள்ள காலியிடங்கள், கழிவறைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மேலும் ரெயில் நிலையத்தில் எந்தமாதிரி அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

15 ரெயில் நிலையங்கள்

அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரை கோட்ட ரெயில்வேயில் 15 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. அதில் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் ஒன்று. இதில் பயணிகளுக்கான காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிவறை, பார்க்கிங் வசதி, ரெயில்வே நடைபாதை மேம்பாலம் கூடுதலாக அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆய்வுக்கு பின் வரைபடம் தீட்டப்பட்டு முடிவு செய்து இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது வருகிற ஜனவரி மாதத்திற்குள் முதல்கட்டமாக பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டத்திற்கு நிதி எதுவும் தற்போது ஒதுக்கப்படவில்லை. பணிகளை முடிவு செய்த பின் மதிப்பிடப்பட்டு நிதி ஒதுக்கப்படும். புதுக்கோட்டை வழியாக அதிக ரெயில்கள் சேவை மற்றும் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு ரெயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story